குழந்தை மேம்பாட்டுத் துறையிலிருந்து பெண் விவசாயியாக மாறிய நாகரத்தினத்தின் கதை!
திரும்பின பக்கமெல்லாம் பச்சை பசேலென செடி, கொடி, ஒய்யாரமாய் வளர்ந்து நிற்கும் பாக்கு, தென்னை, மா, கொன்றை... இன்னும் இன்னும் பசுமை படர்ந்த அந்த அடர்வனப் பகுதிக்குள் எங்கு பார்த்தாலும் மயில்கள் நடனமாடிக்கொண்டிருக்க, குயில் கூவ, காட்டுப்பறவைகளின் க்ரீச் க்ரீச் சத்தம். சில நேரங்களில் தனது உணவுக்காக உள்நுழைந்த யானைகள் என்ற அந்த இயற்கைசூழ் வனத்துக்குச் சொந்தக்காரர் நாகரத்தினம், ஒரு பெண் விவசாயி என்றால் நம்ப முடிகிறதா?

விவசாயம் கொடுத்த அங்கீகாரம்
குழந்தை வளர்ப்புக்கான கல்வி பயின்றவர் தன்னை ஒரு விவசாயி என்று சொல்லிக் கொள்வதில்தான் பெருமிதம் கொள்கிறார். நாகரத்தினம் வெள்ளையங்கரி உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் இயக்குநர்களுள் ஒருவர். பெண்கள் விவசாயக் கூலித் தொழிலாளிகள் என்ற நிலையை மாற்றி, அவர்களுக்கு விவசாயிகள் என்ற அந்தஸ்தைக் கொடுத்துள்ளது இந்த அமைப்பு எனப் பெருமை கொள்ளும் நாகரத்தினம், அவரது குடும்பம், விவசாயம் அவருக்கு அளித்துள்ள அங்கீகாரம், ஆரோக்கியம் குறித்து நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்.
“என்னோட கணவர் ஒரு மருத்துவக் கல்லூரி பேராசிரியர். குழந்தைங்க பொறியியல் படிச்சவங்க.
படிச்சது குழந்தைகள் வளர்ப்புங்கறதால அவங்களை கவனிச்சிக்கறது, அவருக்கு உதவறது இவ்வளவுதான் என்னோட உலகமா இருந்தது. வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கறதுல தொடங்கி வங்கிக் கணக்கு வரைக்கும் எல்லாமும் அவரே கவனிச்சிப்பாரு. குழந்தைகள், சமையல், அவங்க கல்வி இதுதான் வாழ்க்கைன்னு இருந்துட்டு இருந்தேன்.
அப்பத்தான் எங்க மாமனாரோட பூர்வீக நிலம் 20 ஏக்கர் கைக்கு வந்தது. எல்லாரும் அதை வித்துரலாம்னுதான் சொன்னாங்க. எனக்கென்னமோ பூர்வீக பூமியை விக்க மனசு வரல. என் கணவரிடம் இதுகுறித்து சொன்னப்ப, `சரி அப்பாகிட்ட பேசுவோம். என்ன பண்ணலாம்னு யோசிக்கலாம்’னு சொன்னாரு. பசங்களும் வளர்ந்துட்டதால நான் மாமனாருக்கு உறுதுணையா இருந்து அந்த நிலங்களை கட்டிக்காப்பாத்தறது” என முடிவெடுத்தோம் என்று 20 வருடங்களுக்கு முன்பு தான் விவசாயியாக மாற முடிவெடுத்த கதையை விவரிக்கிறார் நாகரத்தினம்.
மண்ணுக்கேத்த பயிர்

“20 வருஷங்களா விவசாயம் பண்ணிட்டு இருக்கோம். பார்க்கறதுக்குப் பெரிசா ஆளுங்க இல்ல, அதனால வெறும் தென்னை மட்டுமே பயிரிட்டோம். அதுக்கு சொட்டுநீர் பாசனம் வட்டமடைகட்டி நீர்ப்பாசனம் அதுமட்டும்தான் தெரியும். ஏறக்குறைய 10-12 வருஷங்களுக்குப் பெரிசா ஒண்ணும் லாபம் பார்க்க முடியலை. வரவுக்கு மீறிய செலவாயிடுச்சு. ஒருகட்டத்துல நிலத்தை வித்திடலாமான்னுகூட யோசனை வந்துருச்சு. அப்பத்தான் ஈஷா விவசாய இயக்கத்து மூலமா பயிற்சிகள் நடத்தினாங்க. நம்ம மண்ணுக்கேத்த பயிர், அதற்கேத்த மகசூல் என படிப்படியா விவசாயம் கத்துக்கிட்டேன்.
மரங்களுக்கு நடுவே ஊடுபயிர் போடறது. இந்த மாட்டு சாணம், மூத்திரம், நாட்டுச்சர்க்கரை பயிர் கலந்த ஜீவாம்ருதம் போட்டு மலட்டு மண்ணை பூத்து, குலுங்கும் சோலைவனமா மாத்தறது போன்ற வித்தைகளைக் கத்துக்கிட்டேன்.
மரங்களுக்கு நடுவே காய்கறிகள், கொடிகள் போட்டேன். வாழை, தென்னை, பாக்கு, தேக்கு, மா, கொய்யா, மாதுளை எனப் பல்வேறு மரங்கள்... கொத்தவரை, தக்காளி, அவரை, கத்திரி, வெண்டை, சுரைக்காய் எனப் பல்வேறு காய்கறிகள்... பாகை, புடலை எனக் கொடிகள் என திரும்பினப் பக்கமெல்லாம், செடி, கொடி, மரம் என மொத்த இடமும் பூத்துக் குலுங்க ஆரம்பிச்சுடுச்சு.
மாசம் சராசரியா 50,000 ரூபா லாபம்
மண்ணை உழுவுற எந்த இயந்திரத்தையும் பயன்படுத்தறதில்ல. பச்சை மிளகாயும், புளிச்சமோரும் கலந்து தெளிக்கும் பூச்சிவிரட்டிதான். காய்களைச் சுத்தி கொஞ்சமா தட்டைப் பயிறு வெச்சிருக்கேன். அதைத்தேடி வரும் நன்மைதரும் பூச்சிகள், காய்களை தின்னும் தீயப் பூச்சிகளை சாப்பிடறதால காய்கறிக்கு எந்த சேதமும் இல்லை. விதை நேர்த்தியாக்க பீஜாம்ருதம், வளர்ச்சி ஊக்கியாக ஜீவாம்ருதம், பயிரின் வேரைப் பாதுகாக்க அதன் காய்ந்த இலை, தழைகளைக் கொண்டு போடும் முடாக்கு மூலமாக எங்க மரம், செடி, கொடிகள் செழிச்சு வளருது. நிலப்பகுதிக்கு உள்ளேயே குளம் எடுத்திருக்கோம். நாட்டு பசு மாடு எட்டு வெச்சிருக்கோம். தன்னிறைவான ஒரு விவசாய முறைக்கு மாறினதால, விக்க நினைச்ச இடத்துல இன்னிக்கு நாலு குடும்பங்கள் பொழைக்குது. அதைத் தவிர 20 பேருக்கு படியளக்க முடியுது. எல்லாத்துக்கும் மேலே மாசம் சராசரியா 50,000 ரூபா லாபம் பார்க்க முடியுது” எனக்கூறும் நாகரத்தினத்தின் கண்களில் வெற்றியின் பெருமிதம் தெரிகிறது.
“இப்பல்லாம் எங்க நிலத்துல விளையற காய்மட்டும்தான் எங்களுக்கு உணவு. எந்த சீசன்ல எந்த பழம் விளையுதோ, அதையே சாப்பிட்டுக்கிறோம். எங்களுக்குப் போக, மீதமுள்ளதை உற்பத்தியாளர் நிறுவனம் மூலமா விற்பனை செய்திட்டு இருந்தோம். இப்ப, எங்க தோட்டத்துக்கு முன்னாடி சின்னதா ஒரு கடை போட்டு இருக்கோம். இயற்கை விவசாயத்தின் மூலமா எங்க விளையுற அத்தனை பொருட்களையும் அங்கே விற்பனை செய்யறோம். மக்கள் தேடிவந்து அவற்றை வாங்கிட்டுப் போயிடறாங்க” என விவசாயத்தில் தன்முனைவோராக தான் வளர்ந்த விதத்தையும், விவசாயம் எத்தகைய மதிப்புக்கூட்டலை, வருமானத்தைக் கொடுத்துள்ளது” என்பதையும் எடுத்துரைக்கிறார் நாகரத்தினம்.

அனைத்திற்கும் மேலாக, தன்னை பெண்விவசாயியாக அடையாளப்படுத்தும் இவர், தனக்குள் வலுபெற்றுள்ள தன்னம்பிக்கை குறித்து கூறியது உண்மையில் அனைத்து பெண்களையும் சிந்திக்கத் தூண்டும்.
“முன்னாடி எல்லாம் யார்கிட்டயாவது பேசணும்னாலே கூச்சமா இருக்கும். தெரிஞ்சத சொல்றதுக்குக் கூட பயப்படுவேன். நான் உண்டு, என் வேலையுண்டுன்னு இருப்பேன். ஆனால், நான் தொடர்ந்து ஈஷா நடத்தும் விவசாயப் பயிற்சிகளில் கலந்துகொண்டதைப் பார்த்தும், எனக்கு விவசாயத்தில் இருக்கும் ஈடுபாட்டைக் கண்டறிந்தும் வெள்ளையங்கரி உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் இயக்குநர்களுள் ஒருவராக என்னை நியமிச்சாங்க. ‘எனக்குப் பேச வராதே, குருவித்தலைல பனங்காயா’ என பயந்தேன். ஆனால், ஈஷாவோட ஆகச்சிறந்த ஊக்கம், வெள்ளையங்கரி உழவர் உற்பத்தியாளர் நிறுவன நிர்வாகிகளின் தொடர் உற்சாகமூட்டல் எனக்குள்ள ஒரு பெரிய நம்பிக்கையையும், தைரியத்தையும் விதைச்சிடுச்சு.
இப்ப எங்க போனாலும் பயமில்லாம பேசுவேன். என்ன தேவையோ, அதை அரசு நிறுவனத்துல, வங்கில எங்கேயும் போய் சாதிச்சுட்டு வந்துடுவேன். ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் இருக்கற எங்க உற்பத்தியாளர் நிறுவனத்தில 40 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட பெண்கள் இருக்கிறோம். விவசாயம் தாண்டிய எங்க பிரச்சினையையும் நாங்களே பேசி, தீர்வு காண முடியுது. சாதிச்சுட்டோங்கற உணர்வு இருக்குங்க” என்றுகூறும் நாகரத்தினத்தின் நம்பிக்கை ஒளிக்கீற்று நமக்குள்ளும் பாய்கிறது.
விவசாயத்தின் மூலம் ஒரு நிலையான மேம்பட்ட வளர்ச்சியை எட்டியுள்ள நாகரத்தினம், ‘விவசாயிகளே, விவசாயிகளுக்காக’ என்ற நிலையை நாடெங்கும் உருவாக்குவதுதான் ஈஷா விவசாய இயக்கத்தின் லட்சியம். அதனை எட்டும் சீரிய பணியில் என்றும் உறுதியாக நிற்பேன் என்கிறார். அவரது வார்த்தைகளில் இருக்கும் உறுதி அவரது கம்பீரத்தை நமக்குப் பறைசாற்றுகிறது.